புல்வாமா தாக்குதல்
புல்வாமா தாக்குதல் file image
இந்தியா

“இப்படி செய்திருந்தால் புல்வாமா தாக்குதல் நடந்திருக்காது”- முன்னாள் ராணுவத் தளபதி சொல்வது என்ன?

Prakash J

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா தேசிய நெடுஞ்சாலையில் சிஆா்பிஎஃப் வீரா்கள் பயணித்த வாகனத்தைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன், நாட்டையே உலுக்கியது.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான சத்யபால் மாலிக் தற்போது கூறியிருக்கும் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் சொல்லியிருப்பது, “புல்வாமா தாக்குதல் சம்பவதுக்கு முன்பாக, சிஆர்பிஎஃப் வீரர்கள் செல்வதற்கு விமானம் கேட்டபோது உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் அமைதி காக்குமாறு எனக்கும் அறிவுறுத்தப்பட்டது” என்பதாகும்.

Satyapal Malik

சத்யபால் மாலிக்கின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்யபால் மாலிக்கின் இந்த கருத்தால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றன.

இதுகுறித்து முன்னாள் ராணுவத் தளபதியான ஜெனரல் ஷங்கர் ராய்சௌத்ரி, “ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு இடையேயான மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலை வழியாகச் சென்ற சிஆர்பிஎஃப் வாகனம் புல்வாமாவில் முஜாஹிதீன் குழுவால் தாக்கப்பட்டது. படையினர் விமானத்தில் பயணித்திருந்தால் உயிர்ச்சேதத்தை தவிர்த்திருக்க முடியும். தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பெரிய வாகனங்கள் மற்றும் கான்வாய்கள் எப்போதும் தாக்குதலுக்கு ஆளாகின்றன. ஆதலால் படையினரை விமானத்தில் அனுப்பியிருந்தால், அது சிறப்பாக இருந்திருக்கும்.

புல்வாமா தாக்குதல்

இந்த தாக்குதலைத் தடுத்திருக்கவும் முடியும். புல்வாமா தாக்குதல் நடைபெற்ற பகுதி எப்போதுமே மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடம். ஜம்முவில் உள்ள சம்பா (சத்வாரி விமான நிலையத்திலிருந்து 31 கி.மீ.) வழியாகச் செல்லும் சாலை, எப்போதும் அச்சம் நிறைந்த பகுதியாக உள்ளது. நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் எல்லைப் பகுதியும் பாகிஸ்தானுக்கு மிக அருகிலேயே இருப்பதாலும், அங்கு பாதிப்புகள் அதிகம் நிகழ்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் ஷங்கர் ராய்சௌத்ரி, 1994 முதல் செப்டம்பர் 1997 வரை இந்திய ராணுவத் தளபதியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.