புதுவை பாரதியார் கிராம வங்கி பெயர் மாற்றம் pt web
இந்தியா

புதுச்சேரி பாரதியார் கிராம வங்கியின் பெயர் 'புதுச்சேரி கிராம வங்கி'யாக மாற்றம்! காரணம் என்ன?

புதுவை பாரதியார் கிராம வங்கியின் பெயர் ‘புதுச்சேரி கிராம வங்கி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வங்கி கிளைகளில் உள்ள பெயர் பலகையில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்றும் இணையதளத்தில் தற்போது இருந்தே பெயர் மாற்றம்.

PT WEB

புதுவை பாரதியார் கிராம வங்கி

செய்தியாளர் பாலவெற்றிவேல்

2008 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது இந்தியன் வங்கியின் கீழ் புதுச்சேரியில் மத்திய மாநில அரசின் கூட்டு முயற்சியில் ஒரு புதிய கிராம வங்கி உருவாக்க திட்டமிடப்பட்டது. 2008 ஜூன் ஒன்றாம் தேதி புதுவை பாரதியார் கிராம வங்கி என்கிற பெயரில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அப்போது இணை அமைச்சராக இருந்த நாராயண சாமியால் வங்கி திறந்து வைக்கப்பட்டது. கிராமப்புற ஏழை மக்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவது சலுகைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த வங்கி செயல்பட்டு வரும் நிலையில் புதுவை, காரைக்காலில் மொத்தமாக 48 கிளைகள் செயல்படுகிறது.

புதுவை பாரதியார் கிராம வங்கி பெயர் மாற்றம்

கடந்த 17 ஆண்டுகளாக புதுவை பாரதியார் கிராம வங்கி என்கிற பெயரில் செயல்பட்டு வந்த வங்கி தற்போது ‘புதுச்சேரி கிராம வங்கி’ என மாற்றப்பட்டுள்ளது. அதன் சின்னமும் மாற்றி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கிராம வங்கியில் ‘பாரதியார்’ பெயர் நீக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வங்கியின் விளக்கம்

இந்தியாவில் உள்ள அனைத்து கிராம வங்கிகளின் பெயரையும் வங்கியின் சின்னத்தையும் நிலைப்படுத்தும் விதமாக மத்திய அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, வங்கிகள் இனி அந்தந்த மாநிலத்தின் பெயரைத் தொடர்ந்து ‘கிராம வங்கி’ என்ற பெயரில் அழைக்கப்படும் என்றும் அதன் தொடர்ச்சியாக புதுவை பாரதியார் கிராம வங்கி இனி ‘புதுச்சேரி கிராம வங்கி’யாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஊரக வங்கிகளை எளிதில் அடையாளம் காணவும், இந்திய அரசின் வங்கி இது என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும் இது உதவும் என்றும் வங்கி பெயர் மாற்றம் எந்த வகையிலும் வாடிக்கையாளர்களையோ, வங்கி சேவையையோ பாதிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, தமிழகத்தில் பல்லவன், பாண்டியன் கிராம வங்கிகள் என இருந்தன. இவை இணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கியாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் அந்தந்த மாநில பெயர்களுடன் இனி கிராம வங்கி செயல்படும். கிராம வங்கிகள் தற்போது இணைக்கப்பட்டு 28 கிராம வங்கிகளாக நாடு முழுவதும் மத்திய அரசு உத்தரவுப்படி மாற்றப்பட்டுள்ளன என்று வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள்.

மகாகவி பாரதியார்

அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு எதிராக தனது கவிதைகள் மூலம் புரட்சி ஏற்படுத்திய பாரதியார் 10 வருடமாக வாழ்ந்து பல்வேறு விதமான பாடல்கள் எழுத காரணமான புதுச்சேரிக்கும் பாரதியாருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் நிலையில் அவரது பெயரால் இயங்கி வந்த வங்கியின் பெயர் மாற்றப்பட்டிருப்பதற்கு தமிழ் ஆர்வலர்கள் சமூக அமைப்புகள் மற்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வங்கி கிளைகளில் உள்ள பெயர் பலகையில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்றும் இணையதளத்தில் தற்போது இருந்தே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.