இந்தியா

புதுச்சேரி: பாண்லே பால் பொருட்கள் திடீர் விலை உயர்வு - அதிருப்தியில் பொதுமக்கள்

kaleelrahman

புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே பால் பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாண்லே மூலம் பால் மற்றும் தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சலுகை விலையிலும் கிடைப்பதால் இந்த பொருட்களுக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் தற்போது பால் பொருட்களின் விலையை பாண்லே நிறுவனம் திடீரென உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. இதன் மூலம் ரூ.2 முதல் ரூ.20 வரை விலை உயர்ந்துள்ளது.

குறிப்பாக குல்பி 25 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், மோர் 7 ரூபாயிலிருந்து 10 ரூபாயாகவும், 400 மி.லி தயிர் 30 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகவும், நெய் 1 லிட்டர் 600 ரூபாயிலிருந்து 620 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் பாண்லே மூலம் விற்பனை செய்யப்படும் ஐஸ் கிரீம் வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.