ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தாலும், புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் தரையில் 6 மணி நேரமாக நகராமல் நிலைகொண்டுள்ளது. குறிப்பாக கடலூருக்கு அருகே 30 கி்மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, புதுச்சேரியில் குறைவான நேரத்தில் அதீத கனமழை பெய்தது. நேற்று மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத்தொடங்கிய புயல், உட்புற தமிழகத்தை நோக்கி நகரவில்லை என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது.
இதனால் புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் அதீத கனமழை என்பது நேற்று மாலை முதலே பதிவாகிக் கொண்டிருக்கிறது. விழுப்புரத்தின் மேற்குப் பகுதிகளில் வரக்கூடிய நேரங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டங்களிலும் பல இடங்களில் கனமழை பதிவாகியுள்ள நிலையில், அடுத்த 8 மணி நேரத்திற்கு தொடர் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மட்டும் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு 48 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி 12 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஜமீத் நகர் பகுதியில் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. நேற்று இரவு 12 மணியில் இருந்து 2 மணிக்குள் பெய்த அதீத கனமழையின் காரணமாக இப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் என்றால் சில பகுதிகளில் மார்பளவுக்குத் தண்ணீரும் காணப்படுகிறது.
இதிலும், இரவு 2 மணியில் இருந்து அடுத்த 6 மணிநேரங்களில் 4 அடி வரை தண்ணீர் வடிந்து சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அரசு வடிகால் பணிகள் ஏதும் செய்யாததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.