புதுச்சேரியில் பொங்கல் திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது, அதிகாலை முதல் பொதுமக்கள் கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது, கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட எந்தவித கட்டுபாடுகளும் விதிக்கப்படவில்லை, இதனால் பொங்கல் பண்டிகை புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது,
அண்டை மாநிலமான தமிழகத்தில் கோவில்களில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்து கோயில்களிலும் பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர், புதுச்சேரி மக்கள் மட்டுமல்லாமல் புதுச்சேரியை ஒட்டி இருக்கக்கூடிய கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்,
இந்நிலையில், புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயம், தைத்திருநாளை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கே திறக்கப்பட்டு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது, அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.