தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக. 30 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில், ஆளும் என்.ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது.
இந்த சூழலில் தான் இன்று, காரைக்காலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, காரைக்காலில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அமித் ஷா தங்கியுள்ள நிலையில் அவரை, என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி தற்போது சந்தித்திருப்பது புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சந்திப்பில், தொகுதிப்பங்கீடு உடன்பாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளான பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டது. இந்த சூழலில், இந்த முறை பாஜக அதிக இடங்களில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. அதேசமயம், முன்பு போட்டியிட்ட 16 இடங்களிலேயே போட்டியிட விரும்புவதாகவும், தங்களால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முடியாது எனவும் என்.ஆர். காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
அதேசமயம், புதுச்சேரி அரசியல் களத்தில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் லஜக-வை கூட்டணியில் இணைத்துக்கொள்ள பாஜக விரும்புவதாகவும், என்.ஆர் காங்கிரஸ் மறுப்புத் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், அமித் ஷாவைத் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில், தொகுதிப்பங்கீடு மட்டுமின்றி கூட்டணியும் இறுதி வடிவத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, காரைக்காலில் நடபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷா திருச்சி வந்தார். அங்கு தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கிய அவர், இன்று காலை 11 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் காரைக்காலுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முடித்த பிறகு தான், ரங்கசாமி - அமித் ஷா சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இதையடுத்து, இன்று மாலை 5.30 மணிக்கு திருச்சிக்கு வரும் அமித் ஷா திருச்சியில் இருந்து மீண்டும் டெல்லிக்கு பயணிக்கவுள்ளார்.