இந்தியா

புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!

webteam

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நமச்சிவாயம் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாலும் கட்சிக்கு துரோகம் இழைத்ததாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, 2016 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் நமச்சிவாயம். அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. நமச்சிவாயம் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாராயணசாமி முதல்வராக பதவியேற்றார். நமச்சிவாயத்துக்கு பொதுப்பணி மற்றும் கலால்துறை வழங்கப்பட்டது. பின்னர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் அமைச்சர் நமச்சிவாயம், கடந்த 2 நாள்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று நடைபெற்ற ஆலோசனையின்போது பேசிய அவர், புதுச்சேரி அரசு நிர்வாகத்தை சரியாக செயல்படுத்த முடியாத சூழல் மற்றும் தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை போன்ற காரணங்களால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இதையடுத்து நமச்சிவாயம் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தன.