இந்தியா

புதுவை: பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு - ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி

EllusamyKarthik

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பத்து தொகுதிகளிலும், பாஜக ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் தனது கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்தார் ரங்கசாமி. தொடர்ந்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆறு பேரும் ரங்கசாமி முதல்வராக தங்களது ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினர். 

அதையடுத்து ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் ரங்கசாமி. முன்னதாக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ‘யார் முதல்வர்’ என்பது குறித்து பேச்சுவார்த்தையும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடந்தது. இறுதியில் ரங்கசாமியே முதல்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு அமைச்சர் பதவிகள் கொடுக்கபடும் என தெரிகிறது. எப்படியும் அக்கட்சிக்கு 3 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படலாம் என புதுச்சேரி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.