இந்தியா

கொரோனா நோயாளிகள் புகார் - கழிவறையை தானே முன்வந்து சுத்தம் செய்த புதுச்சேரி அமைச்சர்

கொரோனா நோயாளிகள் புகார் - கழிவறையை தானே முன்வந்து சுத்தம் செய்த புதுச்சேரி அமைச்சர்

webteam

 புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா முகாமில் இருந்த கழிவறையை  தானே முன்வந்து சுத்தம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லடி கிருஷ்ண ராவ், அண்மையில் அம்மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையின் கொரோனா குறித்த பணிகளை ஆய்வு செய்ய சென்றிருந்தார். அப்போது கொரோனா முகாமில் தங்கியிருந்த நோயாளிகள், அவரிடம் முகாமில் உள்ள கழிவறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்று புகார் எழுப்பினர்.உடனடியாக அங்கு கிருமிநாசினி மற்றும் கழிவறையை சுத்தம் செய்யும் பொருட்களை வரவைத்த அமைச்சர், தாமாகவே முன்வந்து கழிவறையை சுத்தப்படுத்தினார்.

இது குறித்து அவர் கூறும் போது “ 75 நோயாளிகள் தங்கியிருக்கும் முகாமில் உள்ள கழிவறைகள் தினமும் மூன்று முறை சுத்தம் செய்யப்படுகின்றன. சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையால் தூய்மை குறித்தான பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளது. வயது குறைவான கொரோனா நோயாளிகள் கழிப்பறையை உபயோகித்தப்பின்னர் அதனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா சம்பந்தமான பணிகளை மேற்கொள்ள செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள் என 458 பேரை அரசு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்து வைத்துள்ளது.

அவர்களை அடுத்த வாரத்தில் அரசு பணியமர்த்தும் என நம்புகிறேன். ஏற்கனவே அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள 80 செவிலியர்கள் வருகின்றன் ஆகஸ்ட் 30 தேதி பணியில் இணைகின்றனர்” என்றார்.