இந்தியா

”புதுவை மக்களுக்கு பாரபட்சம் காட்டியதில்லை”-ஏனாம் தொகுதி பிரச்னை குறித்து தமிழிசை விளக்கம்

webteam

புதுச்சேரி மக்களுக்கு தாங்கள் பாரபட்சம் காட்டியதில்லை என்றும் ஏனாம் சென்றுள்ள முதலமைச்சர் ரங்கசாமி பிரச்னையை நேரில் பேசி தீர்ப்பார் என்றும் ஆளுநர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் சித்த மருத்துவ தினத்தையொட்டி கடற்கரை சாலை, காந்தி திடலில் நடைப்பயணம் மற்றும் சித்த மருத்துவக் கண்காட்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பேசும்போது, “ஆங்கில மருத்துவதோடு சேர்த்து சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், யோகா சேர்த்து ஆயுஷ் என்று சேர்த்துள்ளனர். பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் , உடல் நலம், மன நலம் பேணப்படுகின்றது. அனைவரும் சிறுக சிறுக சிறுதானிய உணவிற்கு மாறவேண்டும் என்பதுதான் இந்த தினத்தின் செய்தியாக கூறுகிறேன்” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், ”ஒரு சட்டமன்ற உறுப்பினர் வேண்டியதை சொல்லி இருக்கின்றார். புதுச்சேரி மக்களுக்கு நாங்கள் பாரபட்சம் காட்டியதில்லை. அவருக்கு கோரிக்கை இருந்தால் தெரிவிக்கலாம். தற்போது முதலமைச்சர் நேராக சென்று இருக்கின்றார். இதனை பயன்படுத்தி அவர் தெரிவிக்கலாம். முதலமைச்சர் சரி செய்வார் என நினைக்கின்றேன். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்குத் தேவையானதை கேட்கலாம். தற்போது அவர் நேராக கேட்கலாம். பிரச்னைகளை முதல்வர் பேசி தீர்வுகாண்பர் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார், புதுச்சேரி ஆயுஷ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஆர்.ஸ்ரீதரன், சித்த மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் எஸ்.இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.