இந்தியா

''இரவு பகல் பாராமல் போராடினோம்'' : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி

webteam

புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சித்துள்ளது உறுதியாகிவிட்டதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். இதையடுத்து உரையாற்றிய அவர், “புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சித்துள்ளது உறுதியாகிவிட்டது. பல மாநிலங்களுக்கு 41% வரி கொடுத்தார்கள். ஆனால் புதுச்சேரிக்கு 21% வரி மட்டுமே கொடுத்தார்கள். மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சித்தது. ஆனால் நாங்கள் இருமொழிக்கொள்கையை கடைபிடிக்கிறோம். சட்டமன்றம் உள்ள புதுச்சேரியும் டெல்லியும் நிதி கமிஷனில் சேர்க்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் புதுச்சேரி மக்களுக்காக இரவு பகல் பாராமல் போராடினோம். கிரண்பேடி அளித்த நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க முயன்றார்கள். 4 ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் தற்போது அஸ்திரங்களை எடுத்துள்ளன.

புதுச்சேரி மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை.புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது. மாநில பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை 95% நிறைவேற்றி முடித்திருக்கிறோம். மக்களுக்காக இரவு - பகல் பாராமல் போராடினோம். மாநிலத்தின் வருமானத்தை குறைக்க வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டினார்கள். இலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது. மத்திய அரசு மக்களுக்கு செய்யும் துரோகத்தை ஆதரித்தால் அது எதிர்க்கட்சிகளை பாதிக்கும். கலைஞர் பெயரில் சிற்றுண்டி திட்டத்தை தொடங்கினேன். அதை மத்திய அரசு காப்பி அடித்தது.

அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது துரோகம் இல்லையா? புயல் பாதிப்பின் போது எதிர்க்கட்சிகள் எங்கே போனார்கள்? புயல் வெள்ள பாதிப்பின்போது எதிர்க்கட்சிகள் யாரையும் காணவில்லை. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை உயர்த்தியதே மத்திய அரசின் சாதனை. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை கொண்டு ரெய்டு நடத்தியதால் சிலர் ஓடிப்போனார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?” என்றார்.