இந்தியா

``குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்கும் பழக்கும் குறைந்துவிட்டது”- தமிழிசை வருத்தம்

``குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்கும் பழக்கும் குறைந்துவிட்டது”- தமிழிசை வருத்தம்

நிவேதா ஜெகராஜா

தமிழ் பெயரை பிள்ளைகளுக்கு வைப்பது தற்போது அரிதாகிவிட்டது என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஔவையார் விழாவில் பேசியுள்ளார்.

புதுச்சேரி அரசு, கலை பண்பாட்டுத்துறையும் தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் கடற்கரை சலையில் உள்ள காந்தி திடலில் ஔவையார் விழா நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியினை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில், ஔவையாரின் தமிழ் அறிவையும் இலக்கியப் புலமையையும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் மாணவர்கள் “ஔவை தமிழ் போல் வாழ்க“ என்ற தலைப்பில் பேசினார்.

முன்னதாக ஔவை விழா மேடையில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “ஆங்கில பள்ளியில் சேர்ப்பதன் காரணமாக தமிழ் மீது மாணவர்களுக்கு அக்கறை குறைகிறது. அதற்கு பெற்றோர்கள் தான் காரணம். அதிக கட்டணம் செலுத்தி தனியார் ஆங்கிலவழி பள்ளிகளில், சாதாரண ஏழை குடும்பத்தை சார்ந்தவர்கள் ஏன் தங்கள் பிள்ளைகளை போராடி படிக்க வைக்க வேண்டும்? உண்மையில் அரசுப் பள்ளிகளில், அதிக மதிப்பெண் எடுத்த ஆசிரியர்கள் தான் பாடம் கற்று தருகின்றனர். ஆனால் அவர்களிடம் செல்லாமல், தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற மாயை பெற்றோர்களிடம் உள்ளது. தனியார் பள்ளி மீது எந்த அளவிற்கு பெற்றோர்கள் கவனம் செலுத்துகின்றீர்களோ, அதே போன்று அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கவும் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். தாய்மொழி தமிழை கட்டாயம் மாணவர்கள் படிக்கவும், எழுதவும் வேண்டும். பாடத்தில் இல்லை என்றாலும் வீட்டில் தமிழை மாணவர்கள் படிக்க வேண்டும். தமிழிக்கு முக்கியத்தும் கொடுக்கின்ற மாநிலம் புதுச்சேரி. அதை உணர்ந்து பெற்றோர் செயல்பட வேண்டும்” என்றார்.

அவரைத்தொடர்ந்து பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “அனைத்தும் கற்றவள் ஔவை. அதேபோல் அரை அடியில் நல்லதை சொல்லி கொடுத்ததும் ஔவைதான். பிள்ளைகளும் அதுபோல் இருக்க வேண்டும். வீட்டில் பெற்றோர் அதிக புத்தகங்களை வாங்கி கொடுத்து குழந்தைகளை படிக்க வைக்க வெண்டும். இந்த விஷயத்தில் சின்ன சின்ன நூலகங்கள் கிராமங்களில் உருவாக்க முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாயில் நுழையாத பெயரை பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் வைப்பதை காண முடிகிறது. தற்போதெல்லாம் தமிழ் பெயரை பிள்ளைகளுகளுக்கு வைப்பது அரிதாகிவிட்டது. பெற்றோர்கள் தமிழ் பெயரை தங்களின் பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும். `தமிழ் படித்தால் வேலை கிடைக்காது, தமிழ் கற்றதனால் எதுவும் கிடைக்கவிலை’ என்ற நிலை இல்லாமல், `தமிழ் படிப்பதனால் தான் உயர்வு இருக்கிறது’ என்பதை மனதில் ஏந்தி தமிழை அனைவரும் உயிருக்கு, உயிராக நேசிப்போம்” என்றார்.