இந்தியா

’ஆப்சென்ட் ஆன கிரண்பேடி’ சபாநாயகர் தலைமையில் தொடங்கிய புதுவை சட்டப்பேரவை கூட்டம்

webteam

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்காமல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது.

புதுச்சேரி முதல்வர் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கிய நிலையில் அதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி வழங்கவில்லை. வேறொரு தேதிதியில் ஆளுநர் உரையை ஆற்றுவதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து திட்டமிட்டபடி இன்று புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஆளுநருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் “கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் ஜனநாயக முறைப்படி கட்டாயம். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன். ஏற்கெனவே பட்ஜெட் தாக்கல் தேதி முடிந்து 20 நாட்கள் ஆகிவிட்டது. இதனால் புதுச்சேரி அரசும், மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவேண்டிய சட்டப்பேரவை கூட்டம் 15 நிமிடம் ஆளுநரின் வருகைக்காக காத்திருந்தது. அவர் வராததால் 9.45 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் தொடங்கியது. அப்போது கிரண்பேடி வராததால் ஆளுநர் உரையை நிறுத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

மேலும், மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி 2020-2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என சபாநாயகர் தெரிவித்தார்.