புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர், அமைச்சர்கள் நேற்று முதல் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதிரடிப் படையினர் ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்துள்ளனர்.
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனிடையே அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆளுநர் மாளிகை அருகே முதலமைச்சர் நாராயணசாமி கறுப்பு சட்டை அணிந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அமைச்சர்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று தொடங்கிய இந்த தர்ணா போராட்டம் விடிய விடிய தொடர்ந்தது. முதலமைச்சருடன், தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், டிஜிபி சுந்தரி நந்தா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து, போராட்டம் இரவிலும் நீடித்தது. இதனால் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் சாலையிலேயே உறங்கினர். அதேசமயம் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தவிர மற்றவர்கள் கலைந்து செல்ல முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார். கலைந்துசெல்ல மறுத்தவர்களை ஆளுநர் மாளிகை பகுதியில் இருந்து காவல்துறையினர் அப்புறபடுத்தினர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து அதிரடிப் படையினர் ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்துள்ளனர். தலைமைச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று அதிரடிப்படை புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.