இந்தியா

5-வது நாளாக நாராயணசாமி தர்ணா.. அவசரமாக திரும்புகிறார் கிரண்பேடி..!

Rasus

புதுச்சேரியில் அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்ககோரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டம் 5-ஆவது நாளை எட்டியுள்ளது.

புதுச்சேரியில் அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆளுநர் மாளிகை அருகே முதலமைச்சர் நாராயணசாமி கறுப்பு சட்டை அணிந்து கடந்த 13-ஆம் தேதி  தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அதேசமயம் நாராயணசாமி போராட்டத்தை தொடங்கிய மறுநாள் அதாவது 14-ஆம் தேதி துணை ஆளுநரான கிரண்பேடி புதுச்சேரியிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும் எனக் கூறி, தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகிறார் நாராயணசாமி. அவருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் போராட்டத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சர் நாராயணசாமி தனது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளார். இதேபோல் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் அலுவலகங்களிலும் கருப்பு கொடி ஏற்றி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே டெல்லி சென்றுள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வரும் 21-ஆம் தேதி புதுச்சேரி வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவசர அவசரமாக இன்று பிற்பகல் புதுச்சேரி திரும்புகிறார்.

இந்நிலையில் நாராயணசாமியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாராசாமி போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். முன்னதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.