இந்தியா

புதுச்சேரி: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி; இன்னும் சில அறிவிப்புகள்

webteam

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நடப்பாண்டு (2022) விவசாயிகள் பெற்ற கடன்தொகை ரூ 13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவயில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் கடந்த 10ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 22ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்தார். இதன்பிறகு விவாதமும் வாக்கெடுப்பும் நடந்த பின்பு இறுதி நாளான இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் முதல்வர் ரங்கசாமி.

அப்போது, ‘’பேரவையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதை கவனத்தில் கொண்டுள்ளேன். நீங்கள் திருப்தி அடையும் நிலையில் அரசு இருக்கும். அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம். நலத்திட்டங்கள் விரைந்து செயல்பட தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் கோப்புகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து ஒப்புதல் அளித்தால் மாநில வளர்ச்சியடையும்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் நடப்பாண்டு (2022) வாங்கிய ரூ.13.8 கோடி தள்ளுபடிசெய்யபப்டும். வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற அட்டை தாரர்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம் நடைமுறைபடுத்தப்படும்.

மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரூ.1000 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவர்களுக்கு டீசல் மானியம் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி வழங்கப்படும். தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்படாத கட்டடத்தொழிலாளர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

கட்டட நல வாரியம் மூலமாக கட்டட தொழிலாளர்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கி வந்த இறப்பு உதவித்தொகை ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக வழங்கப்படும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். முதியோர் உதவித்தொகை 70 வயதிலிருந்து 80 வயது வரையும் ரூ.2,500 லிருந்து ரூ.3000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்’’ என்பன போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் இனி ’தூய்மை பணியாளர்கள்’ அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் ரங்கசாமி பேரவையில் தெரிவித்துள்ளார்.