புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என புதுச்சேரி அதிமுக எம்.எல். ஏ அன்பழகன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ அதிமுக தலைமை கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து, மனு ஒன்றை நாளை துணை நிலை ஆளுநரிடம் கொடுக்க உள்ளோம். துணை நிலை ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சட்டமன்றத்தைக் கூட்டி, ஆளுங்கட்சியான காங். திமுக கூட்டணி கட்சி அதனது பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிடவேண்டும். இது சம்பந்தமாகவும் நாங்கள் கடிதம் கொடுக்க உள்ளோம்.” என்றார்
மேலும் பேசிய அவர் ”ஸ்டாலினுக்கு ஜனநாயகம் பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை. அவர் காங்கிரஸூக்கு கொடுத்த ஆதரவை அவர் திரும்ப பெறுவாரா” என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்ற ஜான்குமார் ராஜினாமா கடிதம் அளித்தார். 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் தற்போதைய நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.