இந்தியா

புதுச்சேரியில் உணவு விடுதிகள் உள்ளிட்ட கடைகள் திறக்கலாம் - முதல்வர் நாராயணசாமி

webteam

புதுச்சேரியில் கடைகள் எதையும் போலீஸ் மூட சொல்ல வேண்டாம் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3, 36, 075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14,613 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97, 636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா முழுவதும் மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி ஏற்கெனவே அறிவித்தார். இது குறித்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார். மேலும், பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களுக்கு விதிவிலக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில்,புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உணவு விடுதிகள் உள்ளிட்ட கடைகள் திறக்கலாம் எனவும் அங்கு பொதுமக்கள் செல்ல எந்தவித தடையும் இல்லை எனவும் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கடைகள் எதையும் காவல்துறையினர் மூடச்சொல்லக்கூடாது எனவும் முதல்வர் நாராயணசாமி கண்டிப்புடன் கூறியுள்ளார்.