இன்று பெரும்பாலும் வங்கிக் கணக்குகள் மூலமே பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், படிக்கும் மாணவர்கள் முதல் வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் வரை என அனைவரும் தனித்தனியாக தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் கணக்குகளைத் தொடங்கி பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில், ஒவ்வொரு வாடிக்கையாளரும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை தங்களது வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. குறைந்தபட்ச இருப்புத் தொகையானது வங்கிக் கணக்கின் தன்மை மற்றும் வங்கி இயங்கும் பகுதியைப் பொறுத்து ரூ. 1,000 முதல் நிர்ணயிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், இந்தத் தொகையை பராமரிக்காத நபர்களிடமிருந்து அபராதம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டு வெளியான தகவல்படி 13 பொதுத் துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 8,495 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.1,537 கோடியும், இந்தியன் வங்கி ரூ.1,466 கோடியும், பரோடா வங்கி ரூ.1,250 கோடியும் வசூலித்துள்ளது. குறைந்தபட்சமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.19.75 கோடி வசூலித்துள்ளது. மேலும், 2023-24 ஓராண்டில் மட்டும் ரூ. 2,331 கோடி மினிமம் பேலன்ஸ் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 25 சதவிகிதம் அதிகமாகும்.
இது, ஒருசில தொழிலதிபருக்கு கடன் தொகையைவிட அதிகமாகும். இதையடுத்து, சாமானிய மக்களின் பணத்தைக்கூட வங்கிகள் இப்படி வசூலித்திருந்தது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. மத்திய அரசுக்கு எதிராகக் கண்டனங்களும் குவிந்தன. இந்த நிலையில், வங்கியின் நிகர லாபத்தைவிட, இருப்புத்தொகை பராமரிக்காததற்காக வசூலிக்கப்படும் அபராத தொகை அதிகமாக இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தெரியவந்ததைத் தொடர்ந்து, பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தேவையை நீக்க முடிவு செய்துள்ளன. மேலும், தனியார் வங்கிகள் பெரும்பாலும், சம்பள கணக்குகள் மற்றும் பிக்சட் டிபாசிட் வைத்துள்ள வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குக்கு, குறைந்தபட்ச இருப்பு வரம்பு விதிப்பதில்லை. எனவே பொதுத்துறை வங்கிகளைவிட இத்தகைய சலுகை வழங்கும் தனியார் வங்கிகளில் கணக்கு துவங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தவிர, வங்கிகளில், நிகர லாபத்தைவிடக் கூடுதலாக அபராத கட்டணம் வசூலித்தது குறித்த தகவல் வெளியானது மற்றும் மத்திய நிதி அமைச்சக கூட்டங்களில் எழுப்பப்பட்ட விமர்சனங்கள் ஆகியவற்றால், குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு அபராதம் விதிப்பதைக் கைவிட பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா இதை அமல்படுத்தி்விட்டன. இந்த வங்கிகளில், ஒரு வாடிக்கையாளர் தங்கள் MAB-ஐ பராமரிக்கத் தவறினால், பொதுத்துறை நிறுவனம் அதற்கான எந்த அபராதத்தையும் வசூலிக்காது. பாரத ஸ்டேட் வங்கியைப் பொறுத்தவரை கடந்த 2020 மார்ச் முதல் வாடிக்கையாளர்களிடம் இருந்து மினிமம் பேலன்ஸ் அபராதம் வசூலிக்கப்படுவது இல்லை. குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு பதிலாக, டெபிட் கார்டு, ஏடிஎம்மில் கூடுதல் பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணம் போன்றவற்றின் வாயிலாக, வருவாய் பெற திட்டமிட்டுள்ளன.