இந்தியா

நவராத்திரி ஆடை கட்டுப்பாட்டு சுற்றறிக்கையை திரும்ப பெற்றது யூனியன் வங்கி

நிவேதா ஜெகராஜா

பொதுத்துறை வங்கியொன்று தான் விதித்த ‘நவராத்திரி கொண்டாட்டம் மற்றும் ஆடை வழிமுறைகள்’ என்ற சுற்றறிக்கையை, எதிர்ப்புகள் காரணமாக தற்போது திரும்பப்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர், நவராத்திரியின் ஒன்பது நாட்களும் (அக்.7 முதல் அக்.15 வரை) தங்களின் ஊழியர்கள் அனைவரும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். சுற்றறிக்கையை பின்பற்றி உடை அணியாதவர்கள், ரூ.200 அபராதம் செலுத்த வேண்டுமென்றும் அதில் சொல்லப்பட்டிருந்தது. இதை எதிர்த்து கண்டனங்கள் எழுந்து வந்தது.

தமிழகத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை குறிப்பிட்டு, “நவராத்திரியின் 9 நாட்களும் உடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டுமாம். விடுமுறை நாளாக இருந்தாலும்... அப்படி அணியவில்லையென்றால் அபராதம் கட்டவேண்டுமாம். யார் இவருக்கு அதிகாரம் தந்தது! ஊழியர் விதிமுறைகளில் எந்த சரத்தின் கீழ் இந்த சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார்? இது என்ன அரசு வங்கியா, இல்லை அதிகாரி வீட்டின் பூஜை அறையா?

நவராத்திரியை நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அது அவர்களின் விருப்பம். தனிப்பட்ட உரிமை. ஆனால் எல்லோரும் கொண்டாடியாக வேண்டும், இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல். அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்துமீறல். நிதி அமைச்சகம், யூனியன் வங்கி சேர்மன் உடனடியாக இதில் தலையிட வேண்டும். சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி கண்டனம் தெரிவித்து உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தினார்.

சு.வெங்கடேசன் மட்டுமன்றி, பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். குறிப்பாக தொழிலாளர் சங்கம் சார்பில், “நவராத்திரி என்பது மதவிழவாக தனிப்பட்ட முறையில் கொண்டாடப்பட வேண்டியதும் கடைபிடிக்க வேண்டியதும்தான். மற்றபடி அதை அதிகாரப்பூர்வமாக ஒரு பொதுத்துறை வங்கி சொல்வதென்பது, எந்த சரத்திலும் இல்லை. கடந்த 100 ஆண்டுகளில், இப்படி ஒரு வங்கி செயல்பட்டு அபராதம் விதிப்பதாக கூறியதாக வரலாற்றிலேயே இல்லை” என்று கண்டனம் கூறியது.

இந்த எதிர்ப்புகளை தொடர்ந்து தற்போது அந்த வங்கி தனது அறிக்கையை திரும்பப்பெற்றுள்ளது.