சிவம் மிஸ்ரா x
இந்தியா

உபி| போதையில் விபத்து ஏற்படுத்திய சிவம் மிஸ்ரா.. FIR-ல் பெயர்சேர்க்காத போலீஸ்? எழும் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய பிரபல புகையிலை வியாபாரி ஏ.கே மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரை காப்பாற்ற காவல்துறையினர் முயல்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

Premkumar S

கான்பூரில் மதுபோதையில் லம்போகினி ஓட்டிய சிவம் மிஸ்ரா, 6 பேரை காயப்படுத்திய விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அவரை காப்பாற்ற முயற்சிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எஃப்.ஐ.ஆரில் அவரது பெயர் சேர்க்கப்படாதது விவாதத்தை தூண்டியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள விஐபி சாலையில் நேற்று மாலை (ஞாயிற்றுக் கிழமை) அதிவேகமாக வந்த லம்போகினி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடைப்பாதையில் புகுந்து விபத்து ஏற்படுத்தியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய வாலிபர் காரில் இருந்து இறங்கி தப்பிக்க முயன்றார். அப்போது, அங்கிருந்தவர்கள் அவரை பிடித்தபோது அந்த இளைஞர் மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பொதுமக்கள் அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கினர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, விபத்து ஏற்படுத்திய நபரையும் கைது செய்தனர். மேலும், 10 கோடி ரூபாய் மதிப்பிலான அவருடைய காரும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

விபத்து ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ

தொடர்ந்து, குவால் டோலி காவல் நிலைய காவல்துறையினர் விசாரணையில், விபத்து ஏற்படுத்திய நபர் உத்திரபிரதேசத்தில் பிரபல புகையிலை வியாபாரி ஏ.கே மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ரா என்பது தெரியவந்தது. குடி போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 6 படுகாயமடைந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விபத்து ஏற்படுத்திய சிவம் மிஸ்ராவின் பெயர் இடம் பெறவில்லை என்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து, சிவம் மிஸ்ராவை தப்பவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

முன்னாதாக, விபத்து ஏற்படுத்திய காட்சிகள் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் பதிவு செய்திருந்த நிலையில், கார் ஓட்டி வந்தது சிவம் மிஸ்ரா என்பது தெரிய வருகிறது. ஆனால், காவல்துறையின் எஃப்.ஐ.ஆர்- இல் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் யார் என தெரியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தது. பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், காவல்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட லம்போகினி கார் மீது துணி வைத்து மறைக்கப்பட்டதாகவும், அதுகுறித்து கேட்க முற்பட்டபோது தங்களை பவுன்சர் தடுத்தாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சிவம் மிஸ்ராவை காப்பாற்றும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது என விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது சிவம் மிஸ்ராவின் பெயர் எஃப்.ஐ.ஆர்-ல் சேர்க்கப்பட்டிருக்கிறது.

சிவம் மிஸ்ரா

இந்த நிலையில், சிவம் மிஸ்ராவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்ததாகப் சிவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிவம் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த மருத்துவக் காரணத்தைச் சான்றாகக் காட்டி அவரைத் தப்ப வைக்க முயற்சி நடப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெயரை எஃப்.ஐ.ஆரில் சேர்க்காதது மற்றும் குற்றவாளிக்கு ஆதரவாகக் காவல் நிலையத்திலேயே பவுன்சர்கள் நின்றிருந்தது போன்ற நிகழ்வுகள், செல்வாக்கு மிக்கவர்களுக்குக் காவல்துறை சிறப்பு சலுகை வழங்குகிறதா? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.