பிரதமர் பதவியும் பிகார் முதல்வர் பதவியும் காலியாகாது என தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். தர்பங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமித் ஷா, லாலு பிரசாத் தன் மகனை பிகார் முதல்வராகவும் சோனியா காந்தி தன் மகனை பிரதமராகவும் ஆக்க முயற்சிப்பதாக தெரிவித்தார். எனினும், இரு பதவிகளும் காலியாகப்போவதில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார். தேர்தலுக்கு பிறகு நிதிஷ் குமார் முதல்வராக இருக்கமாட்டார் என எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் அமித் ஷாவின் பேச்சு கவனம் பெறுகிறது. எட்டரை கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷன் உள்ளிட்ட தங்கள் அரசின் சாதனைகளையும் அமித் ஷா பட்டியலிட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானா அமைச்சராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தற்போது 15 அமைச்சர்கள் உள்ளனர். இந்நிலையில் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் முகமது அசாருதீனுக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே முகமது அசாருதீன் கடந்த 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் 9 பெண்கள் உட்பட 51 நக்சலைட்டுகள் காவல் துறையிடம் சரணடைந்தனர். இந்நிலையில், சரணடைந்தவர்கள் நலனுக்காக அரசு செயல்படுத்தும் புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் இம்முடிவிற்கு வந்ததாக பீஜப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் யாதவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 650 நக்சலைட்டுகள் பீஜப்பூர் மாவட்டத்தில் மட்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாகவும் 196 பேர் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்குள் நக்சலைட்டுகள் அற்ற இந்தியாவை உருவாக்க உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியுள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் இதுவரை சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார். இந்த வான்வெளித் தடை காரணமாக, ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் மிகவும் நீளமான மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதனால், அதிகப்படியான எரிபொருள் செலவு மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் ஏற்பட்டு, ஏர் இந்தியாவின் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளதாக
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள துமாஸ் கடற்கரையில் 18 வயது இளைஞர் தனது பென்ஸ் காரில் சாகசம் செய்தபோது, கார் கடலில் சிக்கியது. இந்நிலையில், கடற்கரையில் வாகனம் ஓட்டுவதற்கான தடையை மீறியதற்காக, அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, கடலில் சிக்கிய கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. துமாஸ் கடற்கரையில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி வீடியோக்கள் வெளியிட்டு வரும் நிலையில், காவல் துறையினர் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனம் விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ஆர்.வி. பொறியியல் கல்லூரி இணைந்து உருவாக்கியுள்ள ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. செயற்கை நுண்ணறிவு, சென்சார்களைப் பயன்படுத்தி, ஓட்டுநர் தலையீடு இல்லாமல் தானாகவே இந்திய சாலைகளில் செல்லும் வகையில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இன்னும் மேம்பாட்டு நிலையில் உள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, இந்திய சாலை நிலைமைகளைப் புரிந்து, கார் பாதுகாப்பாக இயங்குவதை உறுதிசெய்யும் பொருட்டு, குழுக்கள் தற்போது விரிவான சாலை மேப்பிங் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச அளவில் ஓட்டுநர் இல்லா கார் தயாரிப்புகள் உருவாகத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் அதற்கான முன்னெடுப்புகள் தீவிரமடைந்து வருகின்றன.
மோன்தா புயல் பாதிப்புகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மோன்தா புயல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. கனமழையால் பாப்பட்லா, எலுரு, கிருஷ்ணா உள்ளிட்ட பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய நிலவரம், நிவாரணப் பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கர்நாடக காவல்துறையில் கான்ஸ்டபிள்கள் இனி பாரம்பரியமான 'ஸ்லூச் ஹாட்' (slouch hat) தொப்பிக்குப் பதிலாக, நேவி ப்ளூ பீக் தொப்பிகளை (navy blue peak caps) அணிவார்கள். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சீருடை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய தொப்பிகளை முதல்வர் சித்தராமையா அறிமுகப்படுத்தினார். புதிய தொப்பிகள் காவலர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்றும், அதிகாரிகள் மற்றும் கான்ஸ்டபிள்களிடையே சமத்துவ உணர்வை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது. புதிய தொப்பிகளில் கான்ஸ்டபிளின் சேவை எண் இடம்பெறாது. அது தோள்பட்டையில் மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன்களில் அழைப்பவரின் பெயரைக் காட்டும் புதிய வசதி நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அமல்படுத்தப்படும் எனத் தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த வசதியின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளன. வோடஃபோன் ஐடியா நிறுவனம் ஹரியானாவில் இந்தச் சோதனையைத் தொடங்கியுள்ள நிலையில், ஜியோவும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மொபைல் போன்களில், தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளால் மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் இனி யார் அழைக்கிறார்கள் என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும்.