பிஎஸ்எல்வி-C60 புதியதலைமுறை
இந்தியா

டிச.30-ல் விண்ணில் பாய்கிறது PSLV-C60 ராக்கெட்.. விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயம்!

பிஎஸ்எல்வி-C60 ராக்கெட் டிசம்பர் 30 ஆம் தேதி இரவு 9:58 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் பால வெற்றிவேல்

பிஎஸ்எல்வி-C60 ராக்கெட் டிசம்பர் 30 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் வெற்றிகரமான பயணம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியது.

வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியதன் மூலமும், உலக சந்தையில் முன்னணி அமைப்பாக இஸ்ரோ திகழ்கிறது. தனது கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது.

PSLV-ராக்கெட்

அதன்படி வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ஸ்பேஸ்-எக்ஸ் எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ராக்கெட் ஏவுதல் எப்போது?

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-C60 ராக்கெட் டிசம்பர் 30 ஆம் தேதி இரவு 9:58 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய உள்ளது. இந்த முயற்சி இந்தியாவின் ககன்யான் திட்டம் மற்றும் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு முக்கியமான அடிப்படையாக அமையும் என கூறப்படுகிறது

SPADEX (Space Docking Experiment) திட்டத்தின் கீழ், இரு தனித்தனி விண்கலங்களை விண்வெளியில் இணைக்கும் "டாக்கிங்" எனப்படும் தொழில்நுட்பத்தை சோதிக்கிறது. இது வெற்றிகரமாக முடிந்தால், இந்தியா இந்த சாதனையை அடையும் நான்காவது நாடாகக் கருதப்படும்.

இரண்டு செயற்கைகோள்கள் என்னென்ன?

PSLV-C60 ராக்கெட் மூலம் 220 கிலோ எடை கொண்ட SDX-1 மற்றும் SDX-2 எனப்படும் இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் உட்பட, மொத்தம் 24 உப செயற்கைக்கோள்கள் 470 கிமீ உயரத்தில் உள்ள சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்படும். தனித்தனியாக இரு விண்கலங்களை விண்ணில் ஏவி அவற்றை இணைய செய்வதறகான சோதனை வெற்றி பெற்றால், அதனை சாதிக்கும் 4ஆம் நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.இதற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

எப்போது செயற்கைகோள்கள் திரும்பும்?

இந்த திட்டம் இந்தியாவின் 2035 ஆம் ஆண்டுக்கான தனித்துவமான விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நிலவில் இருந்து மாதிரிகளை திரும்பக் கொண்டு வருதல் போன்ற விஞ்ஞான நோக்கங்களுக்கு அடித்தளமாக இருக்கும். மேலும், ஒரே குறிக்கோளுடன் பல்வேறு ராக்கெட் திட்டங்களை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இது உதவும்.  இஸ்ரோ விஞ்ஞானிகள் 66 நாட்கள் நீண்ட ஆய்வுப் பணிகளை முடித்து, ராக்கெட்டை ஏவுதளத்திற்கு நகர்த்தியுள்ளனர். முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் சர்வதேச விண்வெளி துறையில் இந்தியாவின் வலிமை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.