PSLV-C55/TeLEOS-2 Mission
PSLV-C55/TeLEOS-2 Mission  ISRO, Twitter
இந்தியா

டெலியோஸ்-2, லுமிலைட்-4 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளி பாதையில் நிலைநிறுத்தம்! முழு விபரம்

Snehatara

சிங்கப்பூரை சேர்ந்த இரண்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று பிற்பகல் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இஸ்ரோவின் வர்த்தக ரீதியான திட்டங்களை செயல்படுத்தும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் சிங்கப்பூர் உடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி டெலியோஸ் செயற்கைக்கோள்களை இஸ்ரோவின் ராக்கெட்டுகளால் விண்ணில் ஏவின. ஏவப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக அதன் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன.

PSLV-C55/TeLEOS-2 Mission

ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிச.16-ந்தேதி டெலியோஸ்-1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்தநிலையில்தான், டெலியோஸ்-2 செயற்கைகோள்கள் பிரதான செயற்கைக்கோளாகவும், லுமிலைட்-4 என்கிற நானோ செயற்கைக்கோளும் தற்போது பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளது.

இது இஸ்ரோவின் 57வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் எனக் கூறப்படுகிறது. மேலும் பி.எஸ்.எல்.வி சி.ஏ வகை ராக்கெட்டில் 16வது ராக்கெட் என கூறப்படுகிறது.

PSLV-C55/TeLEOS-2 Mission

முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் பி.எஸ்.எல்.வி. புதிய ஒருங்கிணைப்பு வசதியில் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில்,

”586 கிலோ மீட்டர் உயரத்தில் சிங்கப்பூரை சேர்ந்த இரண்டு செயற்கைக்கோளையும் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்திய பின்னர், ராக்கெட் பாகத்தில் உள்ள POEM -2 என்கிற பாகம் சுற்றுவட்ட பாதை சோதனை மாதிரியாக வலம்வரும். ஏழு வகையான சோதனைகளும் சூரிய தகடுகளும் சரியான முறையில் செயல்படுகிறதா என்பது தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்.

Somnath, ISRO Chairman

இதுவரை 400-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் அனுப்பியுள்ளது. அதில் 57வது பிஎஸ்எல்வி ராக்கெட் இது. இதுவரை விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் இரண்டு மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு இனி பி.எஸ்.எல்.வி ராக்கெட் பொருத்தமாகவும் திருப்திகரமாகவும் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு வருடங்களில் மேலும் பல நாடுகள் தங்களது செயற்கைக்கோளை விண்ணில் அனுப்ப இஸ்ரோவை அணுகி உள்ளதாக தெரிவிக்கிறார் இஸ்ரோவின் வர்த்தக ரீதியான ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்பும் என் எஸ் ஐ எல் பிரிவின் தலைவர் ராதாகிருஷ்ணன்.

அதேபோல் என்.எஸ்.ஐ.எல் தலைவர் விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் பேசுகையில், “தனியார் நிறுவனங்கள் மூலம் சவுண்ட் ராக்கெட் எனப்படும் சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த மேலும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அணுகி உள்ளன. விண்வெளிக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில் வர்த்தக ரீதியான செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்புவதற்கும், சிறிய ரக ராக்கெட்டுகளை தனியார் பங்களிப்போடு அனுப்புவதற்கும் இஸ்ரோ தயாராகி வருகிறது.

வருடத்திற்கு குறைந்தபட்சம் ஆறுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வர்த்தக ரீதியாக அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இன்றைய தினத்தின் வெற்றி, இஸ்ரோ ராக்கெட் தொழில்நுட்பம் மீதான நம்பகத் தன்மையை அதிகரித்துள்ளதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்” என்றார்.

இதற்கு மத்தியில் பிஎஸ்எல்வி சி 55 ராக்கெட் ஏவும் நிகழ்வை கண்டுகளிக்க சென்னை திருச்சி மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து பலர் குடும்பம் குடும்பமாக கண்டுகளிக்க வந்தனர்.