நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு உதவும் 'எமிசாட்' மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் காலை 9.30 மணியளவில் விண்ணில் பாய்கிறது.
இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட மினி செயற்கைக்கோளான 'எமிசாட்' பி.எஸ்.எல்.வி-சி45 மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், சுவிட்சர்லாந்து, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு செயற்கைக்கோள் மற்றும் லுதுவேனியாவை சேர்ந்த 2 செயற்கைக்கோள்கள் என 4 நாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்பட உள்ளன.
இஸ்ரோ மூலம் முதல்முறையாக ஒரே ராக்கெட்டில் 3 செயற்கைக்கோள்கள் வெவ்வேறு புவி சுற்றுவட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சரியாக இன்று காலை9.30 மணியளவில் 28 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 71-வது ராக்கெட் இதுவாகும். இந்த ஆண்டு ஏவப்படும் 2-வது ராக்கெட் மற்றும் பி.எஸ்.எல்.வி.-க்யூஎல் வகையில் விண்ணில் பாயும் முதல் ராக்கெட் இதுவாகும்.
இந்த செயற்கைக்கோள் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள், நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.