இந்தியா

வெள்ளப்பாதிப்புக்கு உடனடியாக ரூ.2000 கோடி: கர்நாடக முதல்வர் கடிதம்

வெள்ளப்பாதிப்புக்கு உடனடியாக ரூ.2000 கோடி: கர்நாடக முதல்வர் கடிதம்

webteam

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார். 

கர்நாடகவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்க நிதிகேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கடந்த 14ஆம் தேதியில் இருந்து 22ஆம் தேதி வரை பெய்த கனமழையின் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2ஆயிரத்து 200 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குடகுப் பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மழையால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 7ஆயிரத்து 500 பேர், 53 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். முதற்கட்ட ஆய்வின் படி வெள்ளத்தால் 3ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உடனடியாக 2ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் குமாரசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.