பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளை பார்வையிட அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் மருத்துவமனைக்கு சென்றபோது போராட்டக்காரர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முசாபர்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 66 குழந்தைகள், மூளைக்காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக முசாபர்பூரில் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22-ம் தேதி வரை மூடப்படும் என்றும், மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் கயா மாவட்டத்துக்கும் பரவியுள்ளது.
இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் ஏராளமான குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக, முசாபர்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. 89 குழந்தைகள் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும் 19 குழந்தைகள் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
89 பேர் உயிரிழந்ததையடுத்து பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வு நடத்த சென்றார். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழந்தைகளின் உறவினர்கள் கோ பேக் நிதிஷ்குமார் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆய்வு செய்த முதலமைச்சர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை ஒவ்வொரு வார்டாக சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார். அவர்களின் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையின் படுக்கையை 600 லிருந்து 2500 ஆக மாற்ற உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 1500 படுக்கையையும் பிறகு மற்றவையும் தயார் செய்ய உத்தரவிட்டுள்ளார்.