இந்தியா

"டோர் டெலிவரியில் மது?" ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ஏமாறும் குடிமகன்கள் !

"டோர் டெலிவரியில் மது?" ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ஏமாறும் குடிமகன்கள் !

jagadeesh

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வீட்டுக்கே மது வகைகள் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு போலியானது என்று அம்மாநகர காவல்துறை தெளிவுப்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவதை தடுப்பதற்காக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனாவின் வீரியம் குறையாததால் அடுத்தக்கட்டமாக மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.

இந்த ஊரடங்கால் மதுப் பிரியர்களின் பாடுதான் திண்டாட்டமாக இருக்கிறது. மதுவுக்கு அடிமையானவர்கள் பலர் அது கிடைக்காததால் ஷேவிங் லோஷன், சானிடைஸர்கள் ஆகியவற்றை குடித்து உயிரிழந்து வருகிறார்கள். அஸாம், மேகாலயா தவிர பல மாநிலங்களில் மே 3 ஆம் தேதிக்கு பின்புதான் மதுக்கடைகள் திறக்கப்படும். அதுவரை மதுப்பிரியர்கள் திண்டாடிதான் போவார்கள்.

ஆனால் இத்தகைய மதுப்பிரியர்களை குறிவைத்து மோசடியும் நடைபெற்று வருகிறது. மிக முக்கியமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி குறிவைக்கின்றன, மோசடி கும்பல்கள். இப்படிதான் மதுவை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்வதாக கூறி ஒரு நபரிடமிருந்து மோசடியாக ரூ.92 ஆயிரத்தை சுருட்டியுள்ளது ஒரு கும்பல்.

இது குறித்து ஹைதராபாத் காவல்துறையின் இணை ஆணையர் ரோகினி பிரியதர்ஷினி "இணையதளத்தை பயன்படுத்தி மிக முக்கியமாக கூகுள் சர்ச்சை பயன்படுத்தி மதுவை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்வதாக கூறி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இப்படிதான் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக ஒருவர் பணியாற்றி வருகிறார். ஆனால் அவர் மதுப் பிரியர். ஊரடங்கு காலத்தில் மது கிடைக்கவில்லை. அதனால் கூகுளில் வீட்டுக்கு மது டெலிவரி செய்யும் நபர்களை தேடியுள்ளார். ஒரு கும்பலிடம் சிக்கிய அவர், அவரின் டெபிட் கார்டை பயன்படுத்தி பலமுறை அவரை ஓடிபி சொல்ல வைத்து ரூ.92 ஆயிரத்தை சுருட்டியுள்ளது. அவர் பணமும் இழந்தார், அவருக்கு மதுவும் டோர் டெலிவரி செய்யப்படவில்லை" என்றார்.

இதனையடுத்து அரசாங்கம் டோர் டெலிவரி முறையில் மது ஏதும் விற்பனை செய்யவில்லை. மேலும் கூகுள் விளம்பரங்கள், சமூக வலைத்தளங்களை நம்பி வீட்டுக்கே வந்து மது விற்பனை செய்யப்படும் என கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று ஹைதராபாத் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.