ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, இனி பெட்ரோல் பங்குகள் பாட்டிலில் பெட்ரோல் வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கத் தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில், “
சில நாட்களுக்கு முன், பெண் மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட மிகவும் வேதனைக்குரியது.
இந்த சம்பவத்திற்கு பிறகு பெட்ரோல் பங்குகளுக்கு PESO licence வழங்கும் அலுவலகத்திலிருந்து கிடைத்த செய்தியில், பெட் பாட்டிலில் பெட்ரோல் இனி கண்டிப்பாக வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு வழங்கப்படுகிறதா என்பதை பெட்ரோல் பங்கில் உள்ள கேமரா மூலமாக ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே டீலர்கள் அனைவரும் இனி பாட்டிலில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தவும் ‘அரசு உத்தரவுப்படி பெட்ரோல் இனி பாட்டிலில் வழங்கப்படமாட்டாது’ என்ற வாசகத்தை டைப் செய்து பெட்ரோல் பங்கில் ஒட்டி வைக்கவும் வேண்டும். இதை மீறி விற்பனை செய்யும் டீலர்களுக்கு தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் பொறுப்பு ஏற்காது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தெலங்கானா அரசும் பாட்டிலில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கக்கூடாது என்ற அரசாணையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.