தொழில்ரீதியாக ஷாஹின் ஷாஹித் மருத்துவராகப் பணிபுரிந்தாலும், அவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் என உடனிருந்த யாருக்கும் தெரியவில்லை கூறப்படுகிறது.
கடந்த வாரம் ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியதாக டாக்டர் ஆதில் அகமது என்பவரை ஜம்மு-காஷ்மீர் காவல் துறை கைதுசெய்தது. ஆதில் அகமது ரத்தரிடம் நடத்திய விசாரணையில், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ஒரு விடுதியில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு, ஆதிலின் கூட்டாளியான மருத்துவர் ஷகீல் அகமது பிடிபட்டார். அங்கு, பல பெட்டிகள் மற்றும் பக்கெட்டுகளில் பதுக்கப்பட்டிருந்த 350 கிலோகிராம் அம்மோனியம் நைட்ரேட் ரக வெடிபொருட்கள், இரண்டு AK-47 ரக துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி, மற்றும் வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் டைமர் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தவிர, மருத்துவர் ஷகீல் அகமதுவும் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணையில், ஷாஹின் ஷாஹித் என்ற பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டார்.
இவர், தொழில்ரீதியாக மருத்துவராகப் பணிபுரிந்தாலும், அவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் என உடனிருந்த யாருக்கும் தெரியவில்லை கூறப்படுகிறது. ஆனால், அவர் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM)இன் பெண்கள் பிரிவை இந்தியாவில் அமைப்பதற்காக ஆதில் அகமது ரத்தரின் கீழ் வேலை செய்து வந்துள்ளார் என்று டெல்லி காவல் துறை வட்டார விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசாரின் சகோதரி சாதியா அசார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெண்கள் பிரிவான ஜமாத் உல்-மோமினாத்தின் இந்தியக் கிளையின் பொறுப்பாளராக ஷாஹித் நியமிக்கப்பட்டதாகவும், அல்-ஃபாலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காஷ்மீர் மருத்துவர் ’முசாமில் கனாயி’ என்ற முசைப்புடன் அவர் தொடர்பில் இருந்தாகவும் தெரிய வந்துள்ளது.
ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பின்னரே இவ்விவகாரம் சூடுபிடித்தது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் கைத்துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை சேமிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கார் ஷாஹித்துக்கு சொந்தமானது என்பதை புலனாய்வாளர்கள் மூலம் தெரிய வந்தது. இதற்கிடையே நேற்று டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிப்புக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதால் ஷாஹித் விசாரணை வளையத்தில் உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், ஷாஹின் ஷாஹித் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து ஹரியானாவின் அல்-ஃபாலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், NDTVக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “கல்லூரியில் அவரைச் சந்திக்க பலர் வருவார்கள். அவருடைய நடத்தை பெரும்பாலும் விசித்திரமாக இருந்தது. அவர் மீது நிர்வாகத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டன. ஷாஹித்தின் தனிப்பட்ட பதிவுகள் மற்றும் அவர் முன்பு பணியாற்றிய இடங்கள் அனைத்தையும் ஆராய வேண்டும் என்ற கோரிக்கைகள் கல்லூரியில் புகாராக அளிக்கப்பட்டன். ஷாஹித் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. யாரிடமும் தெரிவிக்காமல் அவர் வெளியேறுவார். நாங்கள் அவரை ஒருபோதும் இந்த வழியில் சந்தேகிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.