இந்தியா

சித்தார்த்தா வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2000 கோடி மாயம்..? விசாரணையில் அம்பலம்

webteam

கஃபே காபி டே நிறுவனராக இருந்த சித்தார்த்தாவின் தற்கொலைக்கு பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது கணக்கில் இருந்து 2000 கோடி மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளரான இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது காரில் மங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது உல்லாலில் உள்ள நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் வாகனத்தை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து காரை விட்டு இறங்கிய பின்னர் அவர் யாருடனோ போனில் பேசியுள்ளார். தொடர்ந்து அந்த ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், “என் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 6 மாதத்திற்கு முன்பு நான் ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டிருந்தேன். இதற்காக எனது நண்பர் ஒருவரிடமிருந்து பெரும் பணத்தை கடனாக பெற்றேன். ஆனால் நான் விற்ற பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு எனது பங்குகளை வாங்கிய ஒருவர் என்னை மிகவும் நெருக்குகிறார். நீண்ட காலம் நான் போராடி விட்டேன்.. இனிமேலும் என்னால் போராட முடியவில்லை. எனவே எனது போராட்டத்தை நிறுத்திக் கொள்ள தீர்மானித்து விட்டேன்” என எழுதியிருந்தார்.

சித்தார்த்தா இறந்ததிலிருந்து கஃபே காபி டேவின் பங்குகள் சுமார் 90% சரிந்தன. அதன் சந்தை மதிப்பு சுமார் 80 மில்லியனாக குறைந்தது. பிப்ரவரியில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சித்தார்த்தாவின் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து கஃபே காபி டேவின் வாரியம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 2000 கோடி மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. சித்தார்த்தாவுக்கு நெருக்கமாக இருந்து அவரது வங்கிக் கணக்கு விவரங்களை கையாண்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது "விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. இறுதி செய்யப்படவில்லை. எனவே விசாரணை முடிவுகளை முன்கூட்டியே ஊகிப்பது சரியாக இருக்காது. ஒரு சவாலான சூழலில் வணிகத்தை கொண்டு செல்வதும், நிறுவனங்களோடு தொடர்புடைய 30,000 வேலைகள் உட்பட அனைத்து பங்குதாரர்களின் கடமைகளையும் பூர்த்தி செய்வதே சித்தார்த்தாவின் குடும்பத்திற்கு தற்போதைய முதல் குறிக்கோள்” என தெரிவித்தார்.