இந்தியா

தோல்விக்குப் பின் முதன்முறையாக உத்திரப் பிரதேசம் செல்லும் பிரியங்கா

தோல்விக்குப் பின் முதன்முறையாக உத்திரப் பிரதேசம் செல்லும் பிரியங்கா

webteam

நாடாளுமன்றத் தேர்தலின் தோல்விக்குப் பிறகு, முதன்முறையாக நாளை பிரியங்கா காந்தி ரேபரேலிக்குச் செல்கிறார். 

நடந்து முடிந்த 17 வது மக்களவைத் தேர்தலில் போது உத்திரப்பிரதேச கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டார். இவரின் தாயார் சோனியாகாந்தி, ரேபரேலி தொகுதியிலும் சகோதரர் ராகுல்காந்தி அமேதி தொகுதியிலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டனர். இதற்காக பிரியங்கா காந்தி இந்த மூன்று தொகுதிகள் உட்பட பல்வேறு இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். 

ஆனால் காங்கிரஸின் தேர்தல் வியூகம் பலிக்கவில்லை. தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. காங்கிரசின் சொந்த தொகுதியான அமேதியில் போட்டியிட்ட ராகுல் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். ஆனால் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். ரேபரேலியில் போட்டியிட்ட சோனியா காந்தி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பின்னர் நாளை ரேபரேலிக்கு பிரியங்கா காந்தி முதன்முறையாக தோல்வி குறித்து விவாதிக்க செல்கிறார். அங்கு அவர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.