இந்தியா

சாலையில் அமர்ந்து போராட்டம்.. குண்டுகட்டாக தூக்கி செல்லப்பட்டு பிரியங்கா காந்தி கைது!

JustinDurai

விலைவாசி உயர்வை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தியை குண்டுகட்டாக தூக்கி சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்து காங்கிரசார் மனு கொடுக்க குவிந்தனர். பிரதமர் மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்துக்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவானது. போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள் என அனைவரும் கருப்பு நிற ஆடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது தரையில் அமர்ந்து பிரியங்கா காந்தி ஆவேசமாக கோஷம் எழுப்பினார். பின்னர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகளை குண்டுகட்டாக தூக்கி சென்று காவல்துறையினர் கைது செய்தனர். மறுபுறம், குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டனர்.

மக்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் போராட்டம் நடத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் கைதாகுவதற்குத் தயார் என ராகுல் காந்தி கூறினார். இதேபோல் போராட்டத்தில் கலந்துகொண்ட உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்தை அலேக்காக காவல்துறையினர் தூக்கிச் சென்று கைது செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கைது செய்யப்பட்டது குறித்து, பிரியங்கா கூறுகையில், ''எதிர்க்கட்சிகளை நசுக்கி விட முடியும் என பாஜக நினைக்கிறது. பணவீக்கத்தை அமைச்சர்கள் பார்க்க மறுக்கின்றனர். எனவே, அவர்களுக்கு காட்டுவதற்காக நாங்கள் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி சென்றோம். நாட்டின் சொத்துகளை, தனது நண்பர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்துவிட்டார்'' எனக் கூறினார்.