இந்தியா

'உக்ரைன் அகதிகளுக்கு உதவ வேண்டும்' - உலகத் தலைவர்களுக்கு பிரியங்கா சோப்ரா வலியுறுத்தல்

JustinDurai

'இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உக்ரைனில்தான் குழந்தைகள் அதிக அளவில் அகதிகளாக வெளியேறியுள்ளனர்' என்று கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, அவ்வப்போது உலக நடப்பு நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில், உக்ரைனில் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அது தொடர்பான தனது கருத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.

அதில் அவர் கூறுகையில்,  ''ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இடம்பெயர்ந்துள்ள அகதிகளுக்கு உலகத் தலைவர்கள் உதவ வேண்டும். அகதிகளுக்கு ஆதரவாக நீங்கள் (உலகத் தலைவர்கள் ) நிற்க வேண்டும். எங்களால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, குழந்தைகள் அதிக அளவில் இடம்பெயர்ந்ததில் இதுவும் ஒன்றாகும்'' என்று கூறியுள்ளார்.  

மேலும், உக்ரைன் குழந்தைகளுக்கு உதவுவதற்காக தனது  ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பயோவில் யுனிசெஃப் நன்கொடை இணைப்பை பதிவிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.

இதையும் படிக்க: உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 35 பேர் உயிரிழப்பு