இந்தியா

ஜிக்னேஷ் மேவானியை அனுமதிக்க முடியாதா ? பதவியை ராஜினாமா செய்தார் கல்லூரி முதல்வர்

webteam

கல்லூரி விழாவுக்கு எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை சிறப்பு விருந்தினராக அனுமதிக்க முடியாது எனகூறியதால் அக்கல்லூரியின் முதல்வரும், துணை முதல்வரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்

குஜராத் மாநில அகமதாபாத்தில் செயல்பட்டு வருகிறது ஹெச்கே கலை அறிவியல் கல்லூரி. இந்தக்கல்லூரியின் வருட இறுதி நிகழ்ச்சிக்காக வட்காம் எம்.எல்.ஏ.வான ஜிக்னேஷ் மேவானியை அழைக்க விரும்பிய அக்கல்லூரியின் முதல்வர் அவருக்கு அழைப்பு விடுக்க கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளார். ஆனால் ஜிக்னேஷ் மேவானியை அனுமதிக்க முடியாது என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனையடுத்து  கல்லூரி முதல்வர் ஹமந்த்குமார் ஷா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக துணை முதல்வரான  மோகன்பாய் என்பவரும் ராஜினாமா செய்துள்ளார். ஹமந்த்குமார் ஷா அதே கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளாக பொருளாதார துறையில் பேராசியராக பணியாற்றி வந்தவர். அதே போல் மோகன்பாயும் கடந்த 10 ஆண்டுகளாக அதே கல்லூரியில் பணியாற்றி வந்தவராவார்.

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேசிய ஹமந்த்குமார் ஷா, ''நான் தனிமனித சுதந்திரத்தை விரும்புவன். ஜிக்னேஷை அனுமதிக்க முடியாது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருதி ஜிக்னேஷ் மேவானியை அனுமதிக்க முடியாது என அதற்கு கல்லூரி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. எனக்கு ஒரே கேள்வி தான்? அப்படி என்ன அரசியல் சூழ்நிலை தடையாக இருக்கிறது? என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு ஹமந்த்குமார் ஷா அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் இயக்கம் கொடுத்த மிரட்டல் காரணமாகவே ஜிக்னேஷ் மேவானியின் வருகை மறுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்