கொரோனா பேரிடர் மேலாண்மையில் ராணுவ படைகளின் தீவிரமான நடவடிக்கைகள் மற்றும் தயார் நிலை குறித்து பிரதமர் மோடியிடம் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் ராணுவ படைகளில் இருந்து ஓய்வுபெற்ற அல்லது முன்கூட்டியே பணி ஓய்வு பெற்ற அனைத்து மருத்துவ பணியாளர்களும் அவர்கள் வசிப்பிடத்தின் அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரிடம் ராணுவ தலைமைத் தளபதி தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்ற இதர மருத்துவ அதிகாரிகளும் அவசர மருத்துவ எண்களின் வாயிலாக பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கமாண்ட் தலைமையகம், கார்ப்ஸ் தலைமையகம், டிவிஷன் தலைமையகம், அதேபோல கடற்படை மற்றும் விமானப் படையின் தலைமையகங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள அனைத்து மருத்துவ அதிகாரிகளும் மருத்துவமனையில் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனைகளில், மருத்துவர்களுக்கு உதவும் வகையில் ஏராளமான செவிலியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக ராணுவ தலைமை தளபதி பிரதமரிடம் கூறினார். ராணுவ படைகளுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் உள்ள பிராணவாயு சிலிண்டர்கள், மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும் பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பெருமளவில் மருத்துவ வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறிய ராணுவ தலைமை தளபதி, வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு ராணுவ மருத்துவ உள்கட்டமைப்பும் செய்துதரப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்திய விமானப் படையின் வாயிலாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிராணவாயு கொண்டுவரப்படுவது தொடர்பாகவும் பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.
தொலைதூரப் பகுதிகள் உள்பட அதிகபட்ச இடங்களில் உதவிகளை வழங்குவதற்காக பிராந்திய மற்றும் மாநில அளவிலான ராணுவ வீரர்களின் நலவாரியம் மற்றும் பல்வேறு தலைமையகங்களில் பணி புரியும் அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரிகள் வாயிலாக பிற மூத்த அதிகாரிகளின் சேவைகளை ஒருங்கிணைக்க உத்தரவிடலாம் என்றும் ராணுவ தலைமை தளபதியுடன் ஆலோசனை பிரதமர் நடத்தினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.