குடியுரிமை மசோதா குறித்து அசாம் மாநில மக்கள் கவலைப்பட வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
குடியுரிமை தொடர்பான மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்தவுடன் மசோதா சட்டமாகவுள்ளது.
இதனிடையே குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியுரிமை மசோதா குறித்து அசாம் மாநில மக்கள் கவலைப்பட வேண்டாம். உங்களின் உரிமைகள், தனித்துவமான அடையாளம், அழகான கலாசாரத்தை யாரும் பறிக்க முடியாது. அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6ன் படி மாநில மக்களின் மொழி, கலாசார, நில உரிமைகள் பாதுகாக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.