குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று மாலை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தியாவில் அடுத்த ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்ட நிலையில், தற்போது நடந்த மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகள் வரை பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றியின் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.
மேலும் இந்தத் தேர்தல் மூலம் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைக்கும் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்று இருக்கிறார்.
இதற்கிடையே வரும் மே26 ஆம் தேதி குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க மோடி உரிமை கோருவார் என்றும் அன்றே அவர் பதவியேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பான சந்திப்பாக இது இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.