இந்தியா

இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

JustinDurai
கால நிலை மாநாடு, ஜி20 மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஜி20 மாநாடு மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் கால நிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கிளாஸ்கோ மாநாட்டில் நேற்றுமுன்தினம் பேசிய பிரதமர் மோடி, வரும் 2070ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு என்ற இலக்கை இந்தியா எட்டும் என உறுதியளித்தார். நேற்று மீண்டும் உரையாற்றிய பிரதமர், ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொடரமைப்பு திட்டத்தை முன்மொழிந்தார். இதன்மூலம், சூரிய மின்சக்தியை அனைவரும் பயன்படுத்தமுடியும் என பிரதமர் தெரிவித்தார். மேலும், உலகம் முழுவதும் எங்கெல்லாம் மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதை கணக்கீடு செய்யும் முறையை, இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ வழங்கும் என்றார்.
இந்தியா திரும்பும் முன்பு டிவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, பாரிஸ் ஒப்பந்தம் மட்டுமல்ல, காலநிலை மாற்றம் தொடர்பாக அடுத்த 50 ஆண்டுகளுக்கு நிறைவேற்ற பணிகளை இலக்காக நிர்ணயித்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து கிளாஸ்கோ நகரில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் கலந்துரையாடினார். குழந்தைகள் வரைந்த ஓவியங்களில் கையெழுத்திட்டு வாழ்த்தினார். மேலும், அங்கிருந்த கலைஞர்களுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தார்.
முன்னதாக பிரதமர் இஸ்ரேல், நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் பிரதமர் தனியே சந்தித்து பிராந்திய வளர்ச்சி, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதே போல், ஈஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட்டுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இவைதவிர மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உடனும் ஆலோசனை நடத்தினார்.