நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரையாற்றும் போது பிரதமர் நரேந்திர மோடி, குளிக்கும்போது மழைக்கோட்டு அணிந்து குளிக்கும் வித்தை தெரிந்தவர் மன்மோகன் சிங் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீரமானம் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மோடி, குளிக்கும்போது மழைக்கோட்டு அணிந்துகொண்டு குளிக்கும் வித்தை தெரிந்தவர் மன்மோகன் சிங் என விமர்சித்தார். அவரை சுற்றியும் ஊழல் நடைபெற்ற போதும் மன்மோகன் சிங் மீது எந்த கரையும் படியவில்லை என்றும் குறிப்பிட்டார். இதனால் கோபமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்னர். இடது சாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் பிரதமரின் உரை குறித்து அதிருப்தி தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். பிரதமரின் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற மாண்பை குறைக்கும் வகையில் இருந்ததாக தெரிவித்துள்ளது. பிரதமர் தமது கருத்துக்களுக்காக மன்னிப்பு கோரவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியிருக்கிறது.