மாலத்தீவு பிரிட்டன் ஆட்சியில் இருந்து 1965 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி சுதந்திரம் அடைந்தது. அந்த வகையில் தன்னுடைய 60வது சுதந்திர தினத்தை இன்று மாலத்தீவு கொண்டாடுகிறது. 60வது சுதந்திரத்தை சிறப்பாகவே கொண்டாடி வரும் மாலத்தீவு அரசு, அதன் ஒரு பகுதியாக கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுத்திருந்தது. ஏற்கனவே மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே லேசான உரைசல்கள் உருவாகி பின்னர் சரியான நிலைதில் பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணம் இரு நாடுகளுக்கும் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மாலத்தீவு அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நேற்றுக் காலை (ஜூலை 25) தனி விமானம் மூலம் மாலத்தீவின் வேலனா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு விமான நிலையத்திற்கு நேரில் சென்று நரேந்திர மோடியை வரவேற்றார்.
விமான நிலையத்திற்கு திரண்டு வந்த மாலத்தீவு வாழ் இந்தியர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலத்தீவின் தலைநகரமான மாலேவிற்கு நரேந்திர மோடி சென்றார்.
அங்குள்ள சுதந்திர தின சதுக்கத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பிறகு மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவும் பிரதமர் மோடியும் கூட்டாக நிரூபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய நரேந்திர மோடி..
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையிலும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் பரஸ்பர வளர்சி என்ற திட்டதிலும் மாலத்தீவுக்கு எப்போதும் முக்கிய இடம் உள்ளது. தனது பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த இந்தியா எப்போதும் மாலத்தீவிற்கு துணை நிற்கும் என்று கூறினார். மேலும், மாலத்தீவுக்கு 4850 கோடி ரூபாய் கடனை இந்தியா வழங்க உள்ளதாகவும், வரும் காலங்களின் இந்தியா மற்றும் மாலத்தீவிற்கு இடையேயான நட்புறவு புதிய உச்சத்தை தொடும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியா - மாலத்தீவு உறவு ; அன்றும்.. இன்றும்
சீன ஆதரவாளராகக் கருதப்படும் முகமது முய்சு மாலத்தீவு அதிபராக, கடந்த 2023-ஆம் ஆண்டு பதவியேற்றாா். இதைத்தொடா்ந்து மாலத்தீவில் அந்நாட்டுக்கு இந்தியா வழங்கிய இரண்டு ஹெலிகாப்டா்கள், கடல் ரோந்து விமானம் ஆகியவற்றை இயக்கி, பராமரித்து வந்த இந்திய ராணுவ வீரா்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் அதிபர் முய்சு வலியுறுத்தினாா். அதன்படி, அந்த வீரா்கள் திரும்பப் பெறப்பட்டனா். இதனால் இந்தியா-மாலத்தீவு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தியர்கள் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
அதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியா வந்த முய்சுவால், இருநாட்டு உறவுகளும் மேம்பட்டன. தொடர்ந்து, ”இந்தியா-மாலத்தீவு இடையிலான உறவு வலுவாக்கப்படும்” என முய்சு உறுதியளித்திருந்தார்.
அந்த வகையில், தற்போதையை பிரதமர் மோடியின் பயணமும் இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்பெறச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.