இந்தியா

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பு?

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பு?

webteam

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாளை முடிவுக்கு வரவிருப்பதால், அது நீட்டிக்கப்படுமா என்பது பற்றிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இது நாளை முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கை வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஒடிஷா, பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களே அறிவித்துவிட்டனர்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்போம் என்று மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், ஊரடங்கு  நீட்டிப்பது தொடர்பான முடிவை பிரதமர் மோடி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.