மக்களவை கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவைக்கு வருகை தந்தார். அவரை பாஜக உறுப்பினர்கள் மேஜைகளை தட்டி வரவேற்றனர். இதைத் தொடர்ந்து மக்களவையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது....
மகா கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி:
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட கோடிக்கணக்கான மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். உத்தரபிரதேச மக்கள் மற்றும் பிரயாக்ராஜ் மக்கள் ஆகியோருக்கும் மோடி நன்றி தெரிவித்தார். நான் செங்கோட்டையில் பேசும்போது அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பல்வேறு சாதனைகளை புரியலாம் என குறிப்பிட்டேன். அதற்கு உதாரணமாக மகா கும்பமேளா அமைந்துள்ளது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிட்டு கும்பமேளா ஏற்பாடுகளை பாராட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. கோடிக்கணக்கானோர் பங்கேற்கும் நிகழ்ச்சியை நம்மால் நடத்த முடியுமா என்ற சந்தேகங்களுக்கு மகா கும்பமேளா பதில் அளித்துள்ளது.
விவேகானந்தரின் சிகாகோ உரை, பகத்சிங்கின் தியாகம், டெல்லி நோக்கி செல்வோம் என்கிற நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அழைப்பு, மற்றும் மகாத்மா காந்தியின் சத்தியாகிரகம் ஆகியவற்றை நினைவு கூர்ந்து, மகா கும்பமேளாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, நாடு ஒன்றுபட்டு மாபெரும் நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஒற்றுமைக்கு அடையாளமாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஒற்றுமையாக கலந்து கொண்டார்கள். பன்மையில் ஒற்றுமை என்பது நமது சிறப்பாக உள்ளது. வருங்கால சந்ததிகளுக்கு நீரின் முக்கியத்துவத்தை மகா கும்பமேளா வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. இதனால் நதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் வலுப்பெறும். மகா கும்பமேளாவால் நாட்டுக்கு பல்வேறு நல்விளைவுகள் கிட்டும் என பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் பேச்சு குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், “கும்பமேளா நமது வரலாறு மற்றும் கலாச்சாரம் என்று பிரதமர் கூறியதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் , கும்பமேளா கூட்டணி அரசலில் உயிரிழந்தவர்களுக்குசிரத்தாஞ்சலி கொடுக்கவில்லை என்பது எனது புகார். மகா கும்பமேளாவிற்குச் சென்ற இளைஞர்கள் பிரதமரிடமிருந்து வேலைவாய்ப்பை விரும்புகிறார்கள். ஜனநாயக கட்டமைப்பின்படி, எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். இது தான் 'புதிய இந்தியா '” என்றார்.