புதுடெல்லியில் தொடங்கிய 18ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அரிய கனிமங்கள் ஆயுதமாக்கப்படும் போக்கு வளர்ச்சி, நல்லிணக்கம் மீது தாக்கம் செலுத்துவதாக எச்சரித்தார். ஏஐ பலன்கள் அனைவருக்கும் சேர வேண்டும், பெருந்தொற்றுக்கான முன்எச்சரிக்கை அமைப்பு உருவாக்க ஒப்புதல், போர்களால் சாமானியர்கள் பாதிக்கப்படுவதால் பிரிக்ஸ் நாடுகள் தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
18ஆவது பிரிக்ஸ் மாநாடு சனிக்கிழமை அன்று புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் மசூத் பெசஸ்கியான் மற்றும் பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிக்ஸின் கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் 2ஆவது நாள் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், நவீனத் தொழில்நுட்பங்களும் அரிய வகை கனிமங்களும் ஆயுதமாக்கப்படும் போக்கு நிலவுவதாகவும் கவலை தெரிவித்தார். இந்தப் போக்கு வளர்ச்சியையும் நல்லிணக்கத்தையும் பாதிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஏஐ உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களின் பலன்கள் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டுசென்று சேர்க்கப்படவேண்டும் என்றும் பிரதமர் பேசினார். பெருந்தொற்றுப் பரவல் குறித்து முன்கூட்டியே எச்சரிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பிரதமர் பேசினார்.
மேலும் போர்களால் ஏற்படும் பாதிப்புகள் சாமானியர்கள் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் இதற்குத் தீர்வுகாண பிரிக்ஸ் நாடுகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.