2025 ஆகஸ்டு 15-ம் தேதியான இன்று நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் காலை 7.30 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி.
டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்கள், அரசியல்கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருப்பதால், தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. செங்கோட்டை பகுதி முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. தலைநகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ட்ரோன், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சுதந்திர தினத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து வணங்கிய பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “140 கோடி இந்தியர்கள் உற்சாகத்துடன் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறார்கள். அரசமைப்பு சட்டம்தான் இந்தியாவுக்கு ஒளி காட்டும் விளக்கு. கடந்த 78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் வழிகாட்டியாக இருக்கிறது. இந்திய சுதந்திரத்தில் பெண்களின் சக்திக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
இன்று சிறப்புவாய்ந்த நாள். ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை வணங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். 10 ஆண்டுகளாக நடக்காத ஒன்றை நமது ராணுவம் நடத்திக் காட்டியது.
அணு ஆயுத மிரட்டல்களுக்கு இனி இந்தியா அடிபணியாது. ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் புதிய இயல்பை பிரதிபலிக்கிறது. நாம் இப்போது ஒரு புதிய இயல்பை உருவாக்கியுள்ளோம். எதிரிகள் மீண்டும் முயன்றால் எங்கு எப்போது தாக்குதல் என்பதை நமது படைகள் தீர்மானிக்கும்.
சுதந்தரத்திற்குப் பின், கோடிக்கணக்கான மக்களின் பசிப்பிணியை போக்குவது சவாலாக இருந்தது. நமது விவசாயிகள் இந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி கண்டனர். விவசாயிகளின் இந்த உணர்வில்தான் சுயசார்பு உருவாக்கப்பட்டது.
செமி கண்டக்டர் துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் இந்திய Chipகள் சந்தைக்குள் வரும். செமி கண்டக்டர் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை இனி தடுக்கவே முடியாது.
அணுசக்தி துறைக்கு முக்கியத்துவம், அணுசக்தி துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை செய்து வருகிறோம். அணுசக்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இறக்குமதியைக் குறைக்க வேண்டும். பெட்ரோல், எனர்ஜி போன்றவற்றை பெருமளவில் இறக்குமதி செய்வதை குறைக்க வேண்டும்.
தேசிய கனிமத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 1200 இடங்களில் முக்கிய கனிம அகழாய்வு திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சுபான்ஷு சுக்லா விண்வெளி சென்று வந்தார். இந்திய விண்வெளியில் இதுபோன்ற நிறைய முன்னேற்றங்கள் நிகழும்” என தொடர்ந்து பேசிவருகிறார்.