இந்தியா

"இளநீர் விற்கும் தாயம்மாளுக்கு மிகப்பெரிய மனது" பிரதமர் மோடி புகழாரம்

Veeramani

திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளநீர் விற்கும் தாயம்மாளுக்கு 'மனதின் குரல் வாயிலாக பேசுகிறேன்' நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய சேமிப்புப்பணத்தில் பள்ளிக்கு ரூ.1 லட்சம் வழங்கியதற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் 'மனதின் குரல் வாயிலாக பேசுகிறேன்' என்ற வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்த ஆண்டுக்கான முதல் நிகழ்ச்சி இன்று 11.30 மணி அளவில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. வழக்கமாக 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அஞ்சலி செலுத்த ராஜ்காட் சென்றதால் நேரம் மாற்றம் செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டது.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று நமது வணக்கத்துக்குரிய அண்ணல் காந்தியடிகள் மறைந்த நாள். ஜனவரி மாதம் 30-ஆம் தேதி என்பது அண்ணல் அளித்த கற்பித்தலை மீண்டும் நினைவில் கொள்ள வைக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தான் நாம் நமது குடியரசு திருநாளை கொண்டாடினோம். அப்போது டெல்லியில் ராஜ்பாத்தில் தைரியம் மற்றும் திறமைகளை பார்த்தோம் இவை அனைவருக்குள்ளும் பெருமிதத்தையும், உற்சாகத்தையும் அளித்தன. இந்தியா கேட்டில் நேதாஜியின் டிஜிட்டல் உருவமும் நிறுவப்பட்டுள்ளது. இது தேசம் எங்கிலும் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று மக்கள் ஆனந்தப்பட்டார்கள்.

இந்தியா கேட்டிற்கு அருகே அமர்ஜவான் ஜோதி இதன் அருகிலேயே தேசிய போர் நினைவு சின்னத்தில் ஒளிவிடும் தீபங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தின் போது எத்தனையோ நாட்டு மக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களில் கண்களில் கண்ணீர் நிரம்பியது. பிரதம மந்திரி சிறுவர்களுக்கான தேசியவிருது மிகச் சிறிய வயதிலேயே சாகசமும், உத்வேகமும் நிறைந்த செயல்களைப் புரிந்த சிறுவர்களுக்கு வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் பசந்தி தேவி, கர்நாடக மாநிலத்தின் சுரங்க மனிதர் மகாலிங்கா நாயக் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் எனக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

அதில், 2047-ம் ஆண்டி பாரதம் பாதுகாப்புத் துறையில் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருப்பதைத்தான் கனவு காண்பதாக இப்ராஹிம் எழுதியிருக்கிறார். நிலவில் பாரதம் தனது ஆய்வு தளம் அமைக்க வேண்டும். செவ்வாயில் மனிதர்களை குடியமர்த்தும் பணி தொடங்க வேண்டும். கூடவே பூமி சூழல் மாசில் இருந்து விடுபட பாரதம் பெரிய அளவிலான பங்களிப்பில் அளிப்பதை காண்பதே தனது கனவு என்றும் அவர் கூறியிருக்கிறார். இப்ராகிம் எந்த தேசத்திடம் உங்களைப் போன்ற இளைஞர்கள் இருக்கின்றார்களோ அந்த தேசத்தால் சாதிக்க முடியாதது எதுவும் கிடையாது என பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாள் அவர்களின் எடுத்துக்காட்டு மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. தாயம்மாள் அவர்களிடத்தில் அவருக்கென எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக இவருடைய குடும்பம் இளநீர் விற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்தது. பொருளாதார நிலை சரியாக இல்லாத நிலையிலும் தாயம்மாள் அவர்கள் தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. இவருடைய பிள்ளைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியில் படித்து வந்தார்கள். இந்நிலையில் பள்ளியில் நடந்த ஒரு கூட்டத்தில் வகுப்புகள் மற்றும் பள்ளியின் நிலையை சீர் செய்ய வேண்டும், பள்ளியின் கட்டமைப்பை சீர் செய்ய வேண்டும் என்ற விஷயம் விவாதிக்கப்பட்டது. தாயம்மாள் அந்த கூட்டத்தில் பங்கெடுத்திருந்தார்.

இதே கூட்டத்தில் விவாதம் தொடர்ந்து போது அனைத்தும் பணத்தட்டுப்பாடு என்ற நிலையில் தடைபட்டுப் போனது. இதன் பிறகு தாயம்மாள் அவர்கள் செய்த விஷயத்தை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது, இளநீர் விற்று தன் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்த தாயம்மாள், தான் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் ரூபாயை பள்ளிக்கு நன்கொடையாக அளித்தார். உண்மையிலேயே இப்படி செய்ய மிகப்பெரிய மனது வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.