இந்தியா

விமர்சன கணைகளை வீசி வந்த சந்திர சேகர ராவ்; பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

rabiyas

தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர ராவின் 68வது பிறந்தநாளையொட்டி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. 

தெலங்கானா முதல்வரும், ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திர சேகர ராவுக்கும், பாஜகவுக்கும் இடையே  அண்மை காலமாக வார்த்தைப் போர் நிலவி வருகிறது. கடந்த பிப்.5ஆம் தேதி ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, தெலங்கானா வந்திருந்தார் பிரதமர் மோடி. ஆனால் அவரை வரவேற்பதற்கு சந்திர சேகர ராவ் செல்லவில்லை. உடல்நிலையை காரணம் காட்டி புறக்கணித்தார். மேலும் பாஜகவை வங்காள விரிகுடாவில் தூக்கி வீசுங்கள் என்று ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.



”தேர்தல் வந்துவிட்டாலே மாநிலத்திற்கு ஏற்றார் போல் ஆடைகளை மாற்றுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் பிரதமர். தாடியை வளர்த்து ரவீந்திரநாத் தாகூர் போல் வேடமிடுவது, தமிழ்நாடு என்றால் வேஷ்டி, சட்டை அணிவது, பஞ்சாப் தேர்தல் என்றால்  டர்பன் அணிவது.  மணிப்பூர் மற்றும் உத்தராகண்ட் சென்றால் தொப்பி அணிவது போன்ற, பிரதமரின் இந்த மாதிரியான வித்தைகளால் நாட்டுக்கு என்ன பயன்?” என்று கடுமையாக தாக்கி பேசியிருந்தார் சந்திர சேகர ராவ்.

இந்நிலையில், சந்திர சேகர ராவ் பிறந்தநாளையொட்டி அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும் தனது ட்விட்டர் பதிவில் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகள் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.