மோடி, ராம்பால் காஷ்யப் எக்ஸ் தளம்
இந்தியா

ஹரியானா | பிரதமர் மோடிக்காக ஏற்ற சபதம்.. 14 ஆண்டுகள் செருப்பு அணியாத நபர்.. இறுதியில் நடந்த சம்பவம்!

மோடி பிரதமராக பதவியேற்கும்வரை செருப்பு அணிய மாட்டேன் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்பவர் சபதம் எடுத்துள்ளார். தற்போது அவருக்கு பிரதமர் மோடி ஷூ வாங்கிக் கொடுத்துள்ளார்.

Prakash J

அரசியலில் தனது தலைவர்களை உயர்ந்த இடத்தில் அமரவைக்கும் நோக்கில் சில தொண்டர்கள் அதற்காக அல்லும் பகலும் உழைத்து வருகிறார்கள். அதில், சிலர் இன்னும் வித்தியாசமாய் சில சபதங்களை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் செருப்பு அணியாமலும் இருந்து வருகின்றனர். அதாவது, தனது தலைவர் பிரதமராகும் வரையிலோ அல்லது முதல்வராகும் வரையிலோ அல்லது பிற விஷயங்களுக்காகவோ சில தொண்டர்கள் இதுபோன்று செருப்பு அணியாமல் சபதம் மேற்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை சபதம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

pm modi

அந்த வகையில், மோடி பிரதமராக பதவியேற்கும்வரை செருப்பு அணிய மாட்டேன் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்பவர் சபதம் எடுத்துள்ளார். மோடி பிரதமராக தேர்வான பிறகும் ராம்பால் காஷ்யப் செருப்பு அணியாமலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ஹரியானாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 14 ஆண்டுகளாக செருப்பு அணியாத ராம்பால் காஷ்யப் என்ற நபருக்கு ஒரு ஜோடி செருப்புகளை பரிசளித்தார். இது தொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், "யமுனாநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கைத்தலைச் சேர்ந்த ஸ்ரீ ராம்பால் காஷ்யப் ஜியைச் சந்தித்தேன். நான் பிரதமரான பிறகுதான் செருப்பு அணிவேன் என்று அவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு சபதம் எடுத்திருந்தார். ராம்பால் ஜி போன்றவர்களால்தான் நான் பணிவுடன் இருக்கிறேன், அவர்களின் பாசத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் அன்பை நான் மதிக்கிறேன். ஆனால் தயவுசெய்து சமூகப் பணி மற்றும் தேச வளர்ச்சிக்கு தொடர்புடைய ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.