அயோத்யாவில் உள்ள கோயில் ஒன்றில் ஆன்மிகம் கற்க வந்த பெண்ணை கோயில் வளாகத்தில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமைக்குரு கைது செய்யப்பட்டார்.தலைமைக்குரு கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியாவில் உள்ள கோயில் ஒன்றில், ஆன்மிகம் கற்க வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி வாரணாசியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் தலைமைக் குரு கிருஷ்ணா கந்தாச்சார்யாவை சந்தித்து, ஆன்மிகம் குறித்த போதனைகளை கற்க வந்ததாக தெரிவித்துள்ளார். அதைக்கேட்ட கந்தாச்சார்யா, அப்பெண்ணை கோயில் வளாகத்திலேயே தங்குமாறும், தான் பின்னர் வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் வந்த கந்தாச்சார்யா கோயிலில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு அறைக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த அறை ஒன்றில் அப்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 8 நாட்களாக அந்தப் பெண்ணை அதே அறைக்குள் அடைத்து வைத்திருந்த தலைமைக்குரு பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று புத்தாண்டு என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க, தலைமைக்குரு பூஜை வேலைகளில் பிஸியாக இருந்துள்ளார்.
இந்த சமயத்தில் எப்படியோ அப்பெண், தொலைபேசி மூலம் காவல்துறையினரை தொடர்புகொண்டு தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். உடனே கோயிலுக்கு விரைந்த காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டனர். அத்துடன் தலைமைக்குரு கந்தாச்சார்யாவையும் கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.