நாடெங்கும் ரேஷன் கடைகள் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விற்பனை செய்யப்படும் அரிசி மற்றும் கோதுமையின் விலையை இன்னும் ஓராண்டுக்கு உயர்த்தப்போவதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏழை மக்களுக்கு பலனளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மத்திய அரசின் இந்த முடிவு மூலம் நாடு முழுவதும் சுமார் 81.3 கோடி மக்கள் பலனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற முடியும். விலையை உயர்த்துவதில்லை என்ற முடிவின் மூலம் ஏழை எளிய மக்களின் நலனில் இருக்கும் அக்கறையை மத்திய அரசு வெளிப்படுத்தியிருப்பதாக ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார். பொது விநியோக திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும், அரிசி கிலோ 3 ரூபாய்க்கும் மத்திய அரசால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.